உத்திரத்தில் உதித்த உன்னத அருள்
உத்திரத்தில் உதித்த உன்னத அருள்
ஸ்ரீமதி அனுராதா சேஷாத்ரி, பெங்களூரு
பிராட்டியின் தோற்றமும் ஏற்றமும்
ஸ்ரீ குணரத்ன கோஶம் (49)
स्खलितकटकमाल्यैर्दोर्भिरब्धिं
मुरारेः
भगवति दधिमाथं मथ्नतः
श्रान्तिशान्त्यै ।
भ्रमदमृतरङ्गावर्ततः
प्रादुरासीः
स्मितनयनसुधाभिस्सिञ्चती
चन्द्रिकेव ॥ ४९॥
எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, தனது திருத்தோள்களாலும்
திருக்கரங்களாலும் தயிரைக் கடைவது போன்று கடைந்தான். அப்போது அவன் திருக்கரங்களில்
அணிந்திருந்த ஆபரணங்கள் நழுவின. அவனது
மாலைகளும் சிதறின. இவ்வாறு கடைந்து களைப்புற்றிருந்த எம்பெருமானின் நிலையை கண்ட
பெரிய பிராட்டி, அவனிடமுள்ள பரிவு மிகுதியால் அவன் சோர்வு நீங்கும்படி எழில்
வீசும் புன்முறுவலுடனும் கனிவான திருப்பார்வையுடனும் தோன்றினாள்.அமுதினிடையே
தோன்றிய பேரமுதாய், ஒரு பங்குனி உத்திர நன்னாளில் பெரிய பிராட்டி
அவதரித்தாள்.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு “ச்ரிய:பதி” என்கிற அசாதாரண
திருநாமம் உண்டு. பிராட்டியின் திருநாமமோ பெருமை பொருந்திய “ஸ்ரீ” என்ற
சொல்லாகும். “ஸ்ரீ” என்ற பதத்திற்கே மகாலட்சுமி என்று பொருள். எம்பெருமான்
ஜகத்துக்கு சேஷியாக இருப்பதைப் போன்றே பிராட்டியும் சேஷியாகின்றாள். ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயத்தில் பெரிய பிராட்டியார் என்பது ஸ்ரீமஹாலட்சுமி தாயாரைக்
குறிக்கும். பரமாத்மாவான எம்பெருமானுடன் நித்ய அனபாயினி — எப்போதும்
பிரியாதவள் — என்று திகழ்பவள்.அவள் எம்பெருமானின் இன்துணைவி மட்டுமல்ல. புருஷகார
பூதையாக ஜீவர்கள்மேல் கருணை கொண்டு, அவர்களை பரமாத்மாவை அடையச் செய்பவள். இப்பிராட்டியின்
பெருமையை ஆழ்வார்கள் மட்டுமல்லாது பின்னர் வந்த ஆசாரியர்களும் மிகுந்த
உன்னதத்துடன் விளக்கியுள்ளனர். குறிப்பாக
ஸ்வாமி ஆளவந்தார், ஸ்வாமி ராமானுஜர், ஸ்வாமி தேசிகன், பராசர பட்டர் ஆகியோர்
தங்கள் அருளிச்செய்த கிரந்தங்களில் பிராட்டியின் மகிமையை அற்புதமாக
விவரித்துள்ளனர்.
பிராட்டியின் ஸ்வரூபம்
ஆளவந்தார் தாம் அருளிச்செய்த சதுச்ச்லோகியில், பிராட்டியின் ஸ்வரூபத்தை, காந்தஸ்தே
புருஷோத்தம: பணிபதி: சய்யாஸனம் வாஹநம்…என்கிற சுலோகத்தில்,பகவானுக்குரிய ஞானம்,
பலம், ஐஸ்வர்யம், சக்தி, வீரியம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களும் இயற்கையாகவே
உன்னிடமும் இருப்பதால் நீ “பகவதி” என்று சொல்லப்படுகிறாய்.உன்னுடைய
பர்த்தாவானவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்.சர்ப்பங்களில் உயர்ந்த ஆதிசேஷன்
அவனுக்கு படுக்கையும் ஆசனமும் ஆகின்றான்.வேதஸ்வரூபியான கருடன் அவனது
வாகனம்.உலகத்தை மயக்கும் பிரகிருதி எனப்படும் மாயையே உன்னை உணர முடியாதபடி
திரையாக நிற்கிறது.
தேவர்கள், தேவிமார்கள் அனைவரும் உனக்கு கைங்கரியம் செய்பவர்கள்.மேலும் பெருமையைக்
குறிக்க எங்கும் சேர்க்கப்படும் “ஸ்ரீ” என்ற சொல்லே உனக்கு திருநாமமாக
அமைந்துள்ளது.இவ்வளவு உயர்ந்தவளாகிய உன்னை நாம் எவ்வாறு முழுமையாகப் புகழ்வது?
என்று ஆளவந்தார் பெரிய பிராட்டியின் மேன்மையையும் ஸ்வரூபத்தையும் அருளிச்
செய்கிறார்.
ஸ்ரீ குணரத்ன கோஶம் (28)
स्वरूपं स्वातन्त्र्यं
भगवत इदं चन्द्रवदने!
त्वदाश्लेषोत्कर्षात्
भवति खलु निष्कर्षसमये ।
त्वमासीर्मातः! श्रीः!
कमितुरिदमित्थं त्वविभवः
तदन्तर्भावात्त्वां न
पृथगभिदधत्ते श्रुतिरपि ॥ २८॥
ஸ்ரீ குணரத்னகோசத்தில் பராசர பட்டர் ஒரு
உயர்ந்த தத்துவத்தை வெளிப்படுத்துகிறார். எம்பெருமானை அறியவும் புரிந்துகொள்ளவும்
பிராட்டியைத் தழுவியே அறிய வேண்டும் என்பதே அது. எம்பெருமானுக்கு தனிப்பட்ட
அடையாளமாகவும், அவனுள் அவள் அடங்கியிருப்பதாலும், வேதம் தனியாக பிராட்டியைப் பற்றி
ஓதவில்லை போலும் என்று பட்டர் அருளுகிறார்.எம்பெருமானின் ஸ்வரூபம் எப்படியென்கிறதை
உணர்த்துபவளே பிராட்டி.
அவளே எம்பெருமானின் ஸ்வரூப நிரூபக தர்மம் என்று அவர் விளக்குகிறார்.
எம்பெருமானைச் சொன்ன இடமெல்லாம் பிராட்டியையும் சொல்லிற்றாம் என்று எம்பெருமானார்
அருளிச்செய்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.
சரணாகதி தத்துவத்தில் பிராட்டியின் நிலை
சரணாகதி தத்துவத்தில் பிராட்டியின் நிலை
மிக உயர்ந்தது.ப்ரபந்ந ஸந்தான கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார், ஓண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியை என்பதாக பெரிய
பிராட்டியாரும் நீயுமாகச் சேர்ந்து என்னை அபிமானித்து அடிமை செய்ய வழி காட்டிய
விதத்தைக் கண்டு கொண்டு உன் திருவடிகளை அடையும் பாக்கியம் பெற்றேன் என்று
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பகவானிடம் ப்ரபத்தி செய்வது ஸ்ரீ வைஷ்ணவ தர்மம்
என்பதனை நிலை நாட்டியவர்.மற்ற ஆழ்வார்களும் ஆசார்யர்களும் இந்த மார்கத்தையே பின்
பற்றி உயர்ந்தனர்.
ஜெகதாச்சாரியரான ஸ்வாமி ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர
நாளில் நம்பெருமான் பிராட்டியுடன் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளியபோது,
“பகவன் நாராயண அபிமதானுரூப அநந்ய சரணம் சரணம் அஹம் பிரபத்யே” என்று கத்யத்ரயம்
விண்ணப்பித்து முதலில் பிராட்டியையே சரணடைந்தார்.இதன் மூலம் நமக்கு வழிகாட்டியதோடு
தாயாரின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தினார்.
மேலும் லக்ஷ்மி தந்திரத்தில் ப்ராயச்சித்த ப்ரஸங்கேது ஸர்வ பாப
ஸ்முத்பவேமாமேகாம் தேவ தேவஸ்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத் என்று பிராட்டி தன்
திருவாக்கால் அருளிச்செய்தபடி முதலில் பிராட்டியின் திருவடிகளில் சரணம் புகுந்து,
பின்னர் எம்பெருமானின் திருவடிகளில் சரணம் புகுகின்றார் ஸ்வாமி இராமனுஜர்.ஆகவே சரணாகதி
என்ற உபாயத்தில் முதலிடம் வகிப்பவள் பெரிய பிராட்டியே.
லக்ஷ்மி தந்திரத்தில் “லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேச:”
என்று கூறப்பட்டபடி, எம்பெருமான் பிராட்டியுடன் சேர்ந்தே ஜீவர்களை
ரக்ஷிக்கின்றான்.அவளின் துணை கொண்டுதான் எம்பெருமான் ரக்ஷிக்கின்றான் என்று
அனைத்து சித்தாந்தங்களும் வேதாந்தங்களும் கூறுகின்றன.ஆஸ்ரயண வேளையோடு போக
வேளையோடு
“வாசியற ஒரு மிதுனமே உத்தேச்யம்” என்று — நமக்கு உபாயமாகவும் உபேயமாகவும்
இருப்பது அந்த திவ்ய தம்பதியே என்று ஸ்வாமி நம்பிள்ளை அருளிச்செய்துள்ளார்.
ஸ்வாமி நம்மாழ்வாரும்
“அகலகில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று உபாய தசையிலும்
பல தசையிலும் பிராட்டி எம்பெருமானைப் பிரியாது உபாயமாகவும் பலனாகவும்
திகழ்கின்றாள் என்று காட்டியருளுகிறார். இப்படி இவள் அகலகில்லாது எம்பெருமானுடன்
இணைந்து நிற்கும் காரணத்தை நம் ஸ்வாமி
தேசிகன் மிக அழகாக ஸாதிக்கின்றார். தன்னடிசேர்ந்த தமர் உனையணுக நின்னுடன்
சேர்ந்து நிற்கும் நின் திருவே என்று அடியவர்களின் குற்றங்களை
கணிசியாமல் அவர்கள் எம்பெருமானை அடையும்படி செய்கிறாள். இதற்காகவே அவனை கணமும்
பிரியாது அவனுடன் இணைந்து நிற்கிறாள் என்கிறார்.
பிராட்டியின் ஆகாரம்
எம்பெருமானுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகிய ஜகத் வியாபாரங்களிலும்
பிராட்டி அவனுடன் இணைந்து நிற்கின்றாள்.அதோடு ஜீவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும்
உதவுகிறாள். ஜீவர்கள் சாஸ்திரத்தை மீறி நடந்ததால் எம்பெருமான் அவர்களை
சம்சாரத்தில் மீண்டும் மீண்டும் உழலச் செய்கிறான்.ஆனால் பிராட்டியோ கருணையே
வடிவானவள்.
நிக்ரஹம் அறியாதவள்.எம்பெருமானிடத்தில் வால்லப்யம் கொண்டிருந்தாலும்,
ஜீவர்களிடத்தில் வாத்ஸல்யம் கொண்டவளாக இருப்பதால் அவர்களுக்காக எம்பெருமானிடம்
பரிந்து பேசுகிறாள்.இதனால் இருவரில் பிராட்டிக்கே ஒரு ஏற்றம் உண்டு என்று
ஆசாரியர்கள் கூறுகின்றனர்.ஏனெனில் எம்பெருமானுக்குஉபாயம் , உபேயம் இரண்டு
காரியங்கள் இருக்கும்போது,பிராட்டிக்கோ உபாயம், உபேயம் புருஷகாரம் என்று மூன்று
ஆகாரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
பிராட்டியின் ப்ரபாவம்
எம்பெருமானுக்கு உண்டான மங்களங்களெல்லாம்
பிராட்டியின் சம்பந்தத்தாலேயே வெளிப்படுகின்றன என்று ஸ்ரீ பராசரபட்டர் தாம் அருளிச்
செய்த ஸ்ரீ குணரத்ன
கோசம் என்னும் கிரந்தத்தில் விளக்கமாக உரைக்கிறார்.
அவள் இயற்கையாகவே எம்பெருமானுக்கு உடைமையாக
இருப்பவள். பிராட்டியின் சம்பந்தத்தாலே எம்பெருமான் எல்லாப் பெருமைகளையும்
அடைகின்றவனாகத் தோன்றினாலும், அதனால் அவனுக்கு எந்தவித குறையும் உண்டாகாது என்று
பட்டர் தெளிவுபடுத்துகிறார்.
அப்படியானால், “எம்பெருமானை விட பிராட்டி
உயர்ந்தவளா? அவளுடைய தொடர்பால் எம்பெருமானுக்கு பெருமை உண்டாகிறது என்றால்,
அவனுடைய மேன்மைக்கு குறை வராதா?” என்ற கேள்விக்கும் பராசரபட்டர் பதிலளிக்கிறார்.
ஸ்ரீ குணரத்ன கோஶம்
(31) இல் அவர் அருளிச் செய்கிறார்:
स्वतश्श्रीस्त्वं विष्णोस्स्वमसि तत एवैश भगवान्
त्वदायत्तर्धित्वेऽप्यभवदपराधीनविभवः ।
स्वया दीप्त्या रत्नं भवदपि महार्घं न विगुणं
न कुण्ठस्वातन्त्र्यं भवति न
चान्याहितगुणम् ॥ ३१॥
இதே உண்மையை ஆழ்வார்களும் தங்கள்
அனுபவத்தில் வெளிப்படுத்துகின்றனர். எம்பெருமானின் திருமார்பை அலங்கரிப்பதால்
பெருமாளுக்கு ஓர் ஏற்றம் என ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்.
எம்பெருமானின் திருமார்பு பிரகாசிப்பதற்குக் காரணம் பிராட்டி அதில் உறைவதாலே என்று
அருளிச் செய்கிறார்:
“திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை
தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார்
சேர்விடம் தண் வாட்டாறு”
எம்பெருமானின் திருமார்பு “திகழ்கின்றது”
என்று ஆழ்வார் கூறுகிறார். அந்தப்
பிரகாசம் எவ்விதம் வந்தது? பிராட்டி அந்த திருமார்பில் நித்தியமாக உறைவதால் தான்
அது இவ்வாறு ஒளிர்கிறது என்பது ஆழ்வாரின் அனுபவம்.
முடிவுரை
பெரிய பிராட்டியாரின் பெருமை அளவிட முடியாதது. எம்பெருமானுடன் நித்தியமாக
இணைந்து, உலகின் எல்லா ஜீவர்களிடமும் அளவற்ற கருணை கொண்டு அவர்களை வானேற போமளவும்
வழி காட்டும் தாயானவள் அவள். எம்பெருமான் நியாயத்தை நிலைநிறுத்துகின்றவராயின்,
பிராட்டி கருணையை வெளிப்படுத்துகின்றவள். இந்த இரு தத்துவங்களும் சேர்ந்து தான்
ஜீவர்களுக்கு ரக்ஷை உண்டாகிறது.
ஆகவே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஜீவர்கள் எம்பெருமானை அடைவதற்கான வழியாக
பிராட்டியின் புருஷகாரம் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அவள் கருணை வடிவமாக
இருந்து, எம்பெருமானிடத்தில் நமக்காக பரிந்து பேசும் தாயாக விளங்குகின்றாள்.அதனால்
தான் ஆசாரியர்கள் அனைவரும் “ஸ்ரீமந்நாராயணன்” என்று, பிராட்டியுடன்
சேர்த்தே எம்பெருமானை குறிப்பிட்டுள்ளனர். பாவ ரூடௌ பகவதியுவாம் தம்பதி தைவதம்
ந: என்று திவ்யதம்பதிகளைக் காட்டிலும் நமக்கு பேரருள் புரிகிற தைவம் வேறில்லை
என்பது ஸ்வாமி தேசிகனின் கூற்று. இவ்விதம் ஆழ்வார் ஆசார்யர்கள் காட்டிய வழியை
நாமும் பின் பற்றினோமானால் கருத்தொருமித்த இத்திவ்ய தம்பதிகளின் கரை புரண்டோடும்
க்ருபைக்கு பாத்ரமாவது திண்ணம் என்பது பூர்வாசார்யர்களின் திருவுள்ளம் ஆகும்.
ஸ்வாமி
தேசிகன் திருவடிகளே சரணம் !
***
Comments
Post a Comment